உங்கள் கண் அடிக்கடி துடிக்கிறதா?? பயப்பிடாமல் படியுங்கள் உங்கள் பலன் என்னவென்று தெரியுமாம்..!!

செய்திகள்

இங்க பாருங்களேன் என்னோட இடது கண் படபடன்னு துடிக்குது.. எனக்கு வேண்டியவங்களை நான் சந்திக்கப்போறேன்னு நினைக்கிறேன் என்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் வசனம் பேசுவார்கள். கண்கள் மட்டுமல்ல..கன்னம், உதடு போன்றவை கூட சில நேரங்களில் துடிக்கும். இப்படி உடலில் உள்ள உறுப்புகள் துடிப்புகள் குறித்து துடிசாஸ்திரம் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நன்மையைத் தரும். இடக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், பொதுவாக இடப்பாகம் பெண்களுக்கு நன்மை தரும் என்றும், ஆண்களுக்கு வலப்பாகம் நன்மை தரும் என்றும் சோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. பழந்தமிழ் இலக்கியங்களும் கண் துடித்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.

நமக்கு வரப்போகும் சுக, துக்கங்களை முன்கூட்டியே நமது உறுப்புகள் அறிந்து கொண்டு அதை மனிதர்களுக்கு உணர்த்தும் வகையில் துடிப்பதாக துடிசாஸ்திர நூல் கூறுகிறது. பொதுவாக உடம்பின் இடதுபாகம் துடிப்பது நன்மை என்றும் வலது பாகம் துடித்தால் தீயது நடக்கப்போகிறது என்று உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது.
முனைவர் தி. கல்பனாதேவி என்கிற வாலாம்பிகை தனது ஆய்வு கட்டுரையில் கண்கள் துடிப்பது பற்றியும் உடலில் உள்ள உறுப்புகள் துடிப்பதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


பெண்டிர்க்கு நன்மையும், ஆடவர்க்குத் தீமையும் எனக் கருதும் வகையில் இடக்கண் அல்லது இடத்தோள் துடித்தல். ஈண்டு தாம் இடந்துடிக்குமால் அஞ்சல் என்று கம்பராமாயணத்திலும் இடந்துடித்த காரணம் சொல் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலித்தொகைப் பாடலில், பிரிவுத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி என்று நிமித்தம் கூறி ஆறுதல் கூறுகிறாள். நன்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்திக் கூறின. நல்ல அழகையுடைய மையுண் கண்ணும் இடந்துடித்து நின்று நன்மை பயப்பதை என்று எழுதப்பட்டுள்ளது. கண்கள் துடிப்பது மூலம் மாதவிக்குப் பிரிவும், கண்ணகிக்குக் கூட்டமும் நிகழும் என்பதை, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

சாமுத்திரிக்கா லட்சண சாஸ்திரப்படி மூளையிலிருந்து வரக்கூடிய சிக்னல் மூலம் ஒருவரின் எதிர்காரலத்தை கூறக்கூடிய உடல் துடிப்புகள் ஏற்படலாம். தலையின் உச்சிப்பகுதி துடித்தால் நமக்கு வந்த துன்பங்கள் நீங்கும், இடது பாக உச்சி துடிப்பது பெருமை என்றும் வல பாகம் துடித்தால் ஒருவித அச்சம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னந்தலை துடித்தால் எதிரிகள் தொல்லை வரும் என்றும் கூறப்படுகிறது. தலை முழுவதும் ஒருவித துடிப்பு ஏற்படும். இதனால் ஏதோ மிகப்பெரிய பண வருமானம் வரப்போவதை குறிக்கிறதாம்.

ஒருவரின் நெற்றி துடிக்கும் பட்சத்தில் அவருக்கு விரைவில் பணவரவும், அதிக இன்பங்களும் தேடி வரப்போகின்றது என்று அர்த்தம். புருவங்கள் துடித்தால் பெருமை. இடது கண் துடித்தால் செல்வம் சேரும், வலது கண் துடித்தால் நோயும் அதனால் மருத்துவ செலவுகளும் வந்து நீங்குமாம். இடது கண் இமை துடித்தால் உங்களை தேடி விரைவில் நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.அதுவே உங்களின் வலது கண் இமை துடிக்கும் பட்சத்தில் உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும்.

ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று துடிசாஸ்திரநூல் கூறுகிறது. ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படுமாம்.

நீங்கள் பேசும் போது உங்களின் உதடுகள் துடிக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் உன்னதமாக புதிய நண்பரை விரைவில் கிடைக்கப் போவதாக அர்த்தம். அல்லது உங்கள் மனதிற்குப் பிடித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பிரிந்தவர்கள் இணையக் கூடிய வாய்ப்பும் ஏற்படும். வலது மூக்கு முழுதும் துடித்தால் சம்பத்து உண்டாம், இடது மூக்கு துடித்தால் சர்வம் எய்தும். கழுத்து முழுதும் துடித்தால் மரணம் வரப்போவதை உணர்த்துமாம்.

அதே நேரத்தில் சிலருக்கு கண்கள் துடிப்பது என்பது நாள் முழுவதும் இருக்கலாம். சில நாள்களுக்கோ, வாரங்களுக்கோ, மாதங்களுக்கோகூட அது தொடரலாம். அப்படி இருக்கும்போது அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். இதுபோல துடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல கண் மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *