பிரிந்த உங்க குடும்பத்தை ஒன்றுசேர்க்க செய்ய வேண்டியவை!

செய்திகள்

ஒற்றுமையாய் இருந்த உங்கள் குடும்பம் ஏதோ காரணங்களுக்காக பிரிந்திருந்தால் அதனை சீர் செய்யும் முயற்சியினை இன்றே இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள்.முதலில் குடும்ப நபர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை வையுங்கள். ஒருவர் மிகப் பெரிய தவறுகளை செய்திருக்கலாம். பரவாயில்லை,


மன்னியுங்கள். மறந்து விடுங்கள். நடந்தது போகட்டும் நடப்பது நன்மையானதாக இருக்கட்டும். இது ஒரு நொடியில் வராது. ஆனால் ஒவ்வொரு நொடியும் முயற்சி செய்யுங்கள். நடந்து விடும். நீங்கள் மட்டுமே நேர்மையானவர் அல்ல. பாதை தவறும் நபர்கள் அன்பால் நல்ல வழிக்கு வந்து விடுவார்கள். எனவே நம்பிக்கை வையுங்கள்.

பிறரையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இவ்வாறே செய்ய முனைந்தால் நீங்கள் தோற்று மட்டுமே போவீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று குடும்ப நபர்களிடம் சொல்லிப் பாருங்கள். வெற்றி ஓடோடி வரும். குடும்ப நபர்கள் அனைவரும் கை நீட்டி ஓடி வந்து விடுவார்கள்.புதிய உறுதியான பாதையை அனைவரோடும் சேர்ந்து அமையுங்கள்.

பிறர் நிலையில் உங்களை நிறுத்திப் பாருங்கள். அவர்கள் நிலை உங்களுக்கு எளிதாய் புரியும்.உதாரணமாக நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் உங்கள் மனைவியின் நிலையினை நினைத்துப் பாருங்கள்.ஓடாய் உழைத்து உங்களை உருவாக்கிய பெற்றோர்களின் இன்றைய நிலையினை நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள் என்பதால் நீங்கள் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதனை உணருங்கள்.
உடன் பிறந்தவர்களுக்கு உதவுவதால் நீங்கள் கர்ணப் பிரபு இல்லை. ஒருமுறை உதவியதையோ அல்லது பலமுறை உதவியதையோ தேவையின்றி பட்டியலிட்டு நோட்டீஸ் போர்டில் ஓட்டாதீர்கள்.


நீங்கள் பிரச்சினைகளை பேசும் பொழுது எதிராளிக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். சிறிது நாட்கள் கழித்து பேசுங்கள்.குடும்பத்தில் நெருங்கிய உறவுகளிடம் எந்த ரகசியமும் வேண்டாம். அது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கி விடுமே.

குடும்ப உறவுகளிடம் பொய் வேண்டாமே. அது உறவுகளிடம் நீண்ட இடைவெளி ஏற்படுத்தி விடுமே.பொறுமை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது.கணவன் தன் மனைவியை ஏமாற்றுவதும், மனைவி தன் கணவனை ஏமாற்றுவதும் இவர்களையும் இவர்களது குழந்தைகளையும் இவர்களது ரத்த உறவுகளையும் அடியோடு அழித்து விடும். இது இன்றைய கால கட்டத்தில் அதிகரித்தே வருகின்றது.
கல்யாணம் பேசும் பொழுதே படித்த பெண்கள் ஆணின் பெற்றோர் தங்களுடன் இருக்கக் கூடாது என்று சட்டம் போடுவது குடும்பம் என்ற கூட்டின் அடித்தளத்தினையே ஆட்டம் காண செய்து விடுகின்றது.

பெருகி வரும் முதியோர் இல்லங்கள் குடும்பம் என்ற சொல் வரலாற்றில் பார்க்க வேண்டிய சொல் ஆகி விடுமோ என்ற அச்சத்தினைத் தருகின்றது. ஆகவேதான் ‘குடும்ப தின’ என்று வருடமொருமுறை கொண்டாடி நம்மை நாம் நிலைப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

தாத்தா, பாட்டிகளும் பேரன், பேத்திகளும் மிக நன்றாக அன்பாக இருக்கின்றனர். காரணம் அவர்களின் ஒரே எதிரி பெற்றோர்கள்.
இரத்த சம்பந்தம் என உறவுகளைக் கூறலாம். ஆனால் அன்பினால் மட்டும் தான் குடும்பத்தினை காக்க முடியும்.
ஆக பெற்றோர், பெரியோர், மாமனார், மாமியார் உறவுகளை மதியுங்கள்.

மாமியார்களே உங்கள் மருமகள்களை கல்யாணம் என்ற பெயரில் பல சீர் வரிசைகளையும் வாங்கி வீட்டுக்கு அழைத்து வந்து பின் ஓயாமல் சாத்தான் வேதம் ஓதுவது போல் உங்கள் மகனிடம் மருமகளைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்களே. கணவன் மனைவி இடையே உறவில் விரிசலை ஏற்படுத்துவது மகா பாவம் அல்லவா?நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்…. தாத்தா, பாட்டிகளால் தான் அநேக குடும்பங்களில் பலவித பாதுகாப்புகளும், நன்மைகளும் கிடைக்கின்றன. எனவே குடும்பத்தை குடும்பத்தோடு கொண்டாடுங்கள்.- source: maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *