இலங்கையில் இருந்து இந்தியாவரை கடலில் நீந்தி மாற்று திறனாளி இளைஞன் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்..!!

செய்திகள்

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி மாற்று திறனாளி இளைஞன் சாதனை படைத்துள்ளார்.சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர், நீச்சலில் ஆர்வம் கொண்டவர்.


தனது 4 வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் இவர், அதில் பல சாதனைகளை படைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார். ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.இந்த நிலையில் இலங்கை தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைக்க முடிவு செய்தார். அவர் தனது சாதனை பயணத்தை தொடங்குவதற்காக இலங்கை தலை மன்னார் ஊர்முனை கடல் பகுதியை நேற்று முன்தினம் வந்தடைந்தார்.

அன்று மாலை 5 மணிக்கு மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாஸ் தலைமன்னாரில் இருந்து நீச்சல் அடிக்க தொடங்கினார். தொடர்ந்து இரவிலும் விடாமல் நீந்திய அவர், நேற்று மதியம் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சேர்ந்தார்.தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர கடல் பகுதியை 20 மணிநேரம் 20 நிமிடத்தில் கடந்துள்ளார். இதன் மூலம் இந்த கடல் பகுதியை கடந்த முதல் மாற்றுத்திறனாளி வாலிபர் என்ற சாதனையை அவர் படைத்தார்.


அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி வழங்கி பாராட்டினார்.

சாதனை படைத்த வாலிபரை அவரது பெற்றோர், உறவினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் பாரதீய ஜனதா கட்சியினரும் நேரில் சென்று வாலிபரை பாராட்டினர்.மேலும் கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.