பெற்றோர்களே! உங்க குழந்தையோட ஒரு நல்ல உறவை வளர்க்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

செய்திகள்

ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை அன்பாக வளர்க்கத்தான் விரும்புவார்கள். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான தொடர்பு என்பது மிகவும் புனிதமானது. இந்த உறவுக்குள் பல்வேறு விஷயங்கள் நடக்கவோ, அன்பான தருணங்களை உருவாக்கவோ பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். நண்பர்கள்போல உங்கள் குழந்தையிடம் நடந்துகொள்ள வேண்டும்.


அதேநேரம் அவர்களுக்கு பெற்றோராகவும் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம் பெற்றோர்களாகிய உங்களிடம்தான் உள்ளது. உங்கள் குழந்தையோடு நீங்கள் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்க வேண்டும்.குழந்தைகளுடனான

இந்த உணர்ச்சி ரீதியான பிணைப்பின் முக்கியத்துவத்தையும் அதை ஊக்குவிப்பதற்கான எளிய வழிகளையும் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.எளிதான வீட்டு வேலைகளில் உங்கள் குழந்தையையும் ஈடுபடுத்தி, இருவரும் சேர்ந்தே செய்யலாம். புதிய மரக்கன்றுகளை நடுவது, உணவைத் தயாரிப்பது அல்லது காய்கறிகளின் தோல் உரிப்பது போன்ற எளிமையான வேலைகளை இருவரும் இணைந்து செய்யுங்கள்.

இது வேலையை எப்படி பகிர்ந்து செய்யலாம் என்றும் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்கவும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் உதவும். மிக முக்கியமாக, இது உங்கள் குழந்தைகள் செல்போன் அல்லது வீடியோ கேம் போன்ற பிற எலக்ட்ரானிக் கேஜெட்களில் செலவிடும் நேரத்தை குறைக்கும்.சாப்பிடும்போது, வீட்டில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவது உங்கள் குழந்தையுடன் தொடர்பு கொள்ளவும், உங்கள் தொடர்புகளை வலுப்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவது, குடும்பத்தில் உள்ள ஒற்றுமையையும் பெற்றோர் குழந்தை உறவையும் பலப்படுத்தும். மேலும், சாப்பிடும்போது ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

உங்கள் குழந்தையுடன் நேரம் செலவிட, அவர்கள் செய்ய விரும்பும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுங்கள். இது உங்கள் குழந்தையின் வயது மற்றும் ஆர்வங்களைப் பொறுத்து அமையலாம். நீங்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக நீங்கள், உங்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடலாம்.

உங்கள் குழந்தை தேர்ந்தெடுக்கும் விளையாட்டை நீங்கள் ரசிக்கவில்லையென்றாலும், அதை செய்ய நீங்கள் முயற்சி செய்யலாம். இப்படி செய்வது, உங்கள் குழந்தை மீதான அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும்.

உங்கள் குழந்தைகள் அவர்கள் செய்யும் செயல்களை ஏன் அதிகம் ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், அவர்களின் ஆளுமையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம். உங்கள் குழந்தை புதிதாக ஒன்றை முயற்சிக்கும்போது, அதை சிரிப்புடன் வரவேற்க வேண்டும். இது உறவுகளை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.


உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு என்ன தேவை இருக்கிறது? எதை விரும்புகிறார்கள்? என்பதை பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் கேட்பது, உங்கள் குழந்தையோடு ஆழமான தொடர்பில் இருக்க உதவும்.

உங்கள் குழந்தையின் பார்வையில் இருந்து சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் உணர்ச்சிகளை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மேலும், உங்கள் குழந்தை கூற வருவதை நீங்கள் காதுகொடுத்து கேட்கிறீர்கள் என்று அவர்களுக்கு உறுதியளியுங்கள்.நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஓர் அரவணைப்பு மற்றும் உண்மையான பாசம் தேவைப்படுகிறது. ஆதலால், உங்கள் குழந்தைக்கு அன்பான அரவணைப்பை கொடுப்பது மிகவும் முக்கியம்.

உங்கள் குழந்தைகளின் கைகளை பற்றிக்கொள்வது, கட்டிப்பிடிப்பது போன்றவை அவர்களுடன் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்க உதவும். மேலும், உங்கள் குழந்தையுடன் இணைவதற்கான எந்தவொரு வாய்ப்பையையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அமைக்க நீங்களும் முயற்சி செய்ய வேண்டும்.