7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து செல்லாது தனக்கென ஒரு வழியை பாதையை அமைத்துக் கொள்பவர்கள் இவர்கள். 7 எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களிடம் தெய்வ பக்தியும், ஆன்மிக நாட்டமும் அதிகம் இருக்கும். சாஸ்திரங்களின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். கண்ணுக்கு புலப்படாத அமானுஷ்ய சக்திகளை ஆராய்வார்கள். எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாலும் முடித்தே தீர்வார்கள்.

இவர்கள் உடையில் எளிமையும், சுத்தமும் இருக்கும். தங்களது கடமையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். மற்ற எண்காரர்களை விட இவர்கள் மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்கள். எடுத்துக்கொண்ட பணியை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். உடல் சக்தியை காட்டிலும் மனோசக்தி அதிகம் கொண்டவர்கள். தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரும்.
இவர்களுக்கு முன்கோபம் ன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் வெளியில் தெரியாமல் போய்விடும். பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள்.
சமூகம் சார்ந்த பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். சில நேரங்களில் காரணமில்லாமல் மனக்குழப்பம் அடைவார்கள். இவர்களின் செயல்களும், திட்டங்களும் எப்போதும் வித்தியாசமான ஒன்றாக இருக்கும். இவர்களை ஊக்கப்படுத்தினால் செயற்கரிய பல காரியங்களை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் தனக்கென சில விதிமுறைகளை வகுத்து கொண்டு அதன்படி வாழ்வார்கள்.

சமூக வாழ்க்கையில் அதிக ஈடுபாடும், அதனால் செல்வாக்கும், புகழும் அடையக்கூடியவர்கள். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன், தீர ஆலோசித்த பின்புதான் ஒரு முடிவுக்கு வருவார்கள். தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இவர்களிடம் மிகவும் குறைவு.
இவர்கள் அமைதியான தோற்றமும், தெய்வீகமான சிந்தனையும் கொண்டவர்கள். சற்று உயரமாக இருப்பார்கள். மூக்கும், புருவங்களும் எடுப்பாக அழகாக இருக்கும். நெற்றி நீண்டு இருக்கும். மெலிதான தோற்றம் கொண்டவர்கள். தலைமுடி அதிகம் இருக்கும். தலைமுடி நன்கு கருமையாக இருக்கும். காதுகள் விரிந்து விசாலமாக காணப்படும். நீண்ட அகன்ற நெற்றியை உடையவர்கள். கண்களில் குளுமையும், பிரகாசமும் இருக்கும்.
தாய் வழி உறவுகளின் மூலம் ஆதரவும், அன்பும் கிடைக்கும். சகோதரர்கள் தேவையான உதவிகளை செய்து தருவார்கள். மனைவி வழி உறவினர்களிடம் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். தந்தையிடம் ஆதரவுகள் கிடைத்தாலும் சிறு கருத்து வேறுபாடுகள் எப்போதும் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
யாரிடம் பழகினாலும் மிகுந்த ஆழமான நட்புகளை வைத்துக் கொள்வார்கள். சில நண்பர்களிடம் மட்டும் மனதில் இருக்கும் கருத்துக்களை எப்போதும் பரிமாறி கொண்டு இருப்பார்கள். நட்பிற்காக துணிந்து செய்வார்கள். நண்பர்களின் முயற்சிக்கும், வெற்றிக்கும் உதவி புரிவார்கள்.
வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரிடமும் நட்பு வைத்து கொள்வார்கள். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் அடைவார்கள். 1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்காரர்களில் இவர்களுக்கு பெருத்த உதவியும், முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலும் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

இவர்களுக்குத் திருமணம் தாமதமாக தான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின் திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த விதத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூற இயலாது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
குடும்ப வாழ்க்கை எதிர்பார்த்தப்படி பலருக்கு அமைவதில்லை.குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை வெளியில் சிறிதும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான். மாறுபட்ட குணங்களுடன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வார்கள்.
ஜவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், குளிர்பான வகைகள், ஐஸ்கிரீம், புகையிலை பொருட்கள் விற்பனை, சமையல் கலை, சட்டம், நீதித்துறை, மருந்துக்கடை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான தொழில்கள், ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், ஜெராக்ஸ் கடை, போட்டோ ஸ்டூடியோ, கடிகார கடை போன்ற தொழில்கள் இவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.
மேலும் சிற்பம், சங்கீதம், நாட்டியம், கம்ப்யூட்டர் தொடர்பான தொழில்கள், கம்யூட்டர் கல்வி பயிற்றுவிப்பாளர், மரச்சாதனங்கள் விற்பனை, பாத்திரங்கள் தயாரித்தல், வேதங்கள், ஆன்மிகம், சமூக சேவை செய்தல், கிரானைட் தொழில்கள், பிராணிகளை பிடிக்கும் தொழில், விஷம் சம்பந்தமான பொருட்கள் தயாரித்தல் தொழில்கள், நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள், வானியல் ஆராய்ச்சி தொடர்பான தொழில்கள் இவர்களுக்கு சாதகமாக அமையும்.
சட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக் கடையும் இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும். அயல்நாட்டு வியாபாரங்களும், ஏற்றுமதி& இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச் சிறந்தது. பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரும். ரேடியோ, டெலிவிஷன், கடை ஆகியவையும் அமைக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும் 2, 11, 20, 29ந் தேதிகள் மிகுந்த அதிர்ஷ்டகரமானவை. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் நன்மையே அளிக்கும். 7, 16, 25 ஆகிய நாட்கள் சுமாரான பலன்களையே கொடுக்கும். எனவே அந்நாட்களை தவிர்த்து விடவும். கூட்டு எண் 7 அல்லது 8 வரும் நாட்களையும் ஒதுக்கி விடவும். அதே போன்று கூட்டு எண் 2 மற்றும் 1 வரும் நாட்கள் அதிர்ஷ்டமானவை.
இவர்களுக்கு வைடூர்யம் இரத்தினமே மிகவும் அதிர்ஷ்டமானது. சந்திர காந்தக்கல்லும் நன்மையளிக்கக்கூடியது. MASSAGATE மற்றும் OPAL ஆகிய இரத்தினக் கற்களையும் உபயோகிக்கலாம். நன்மையே தரும். TIGER-EYE எனப்படும் கல்லும் யோகமான பலன்களைக் கொடுக்கும்.
வெண்மை நிறம் இவர்களுக்கு மிகவும் ஏற்றது. இலேசான மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் சிறந்தவையே. கரும் சிவப்பையும், கருப்பு நிறத்தையும் தவிர்க்க வேண்டும். பல வர்ண உடைகளும் அதிர்ஷ்டமானவை.இவர்களுக்கு வாயுக்கோளாறு, உள்ளுறுப்பு பாதிப்புகள், அலர்ஜி, தேமல், பொடுகு, படர்தாமரை போன்ற வியாதிகள் தோன்றும். தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அவ்வப்போது வந்து மறையும். மலச்சிக்கல் உண்டாகும்.
மனக்கவலைகளும், மனச்சோர்வும் அடிக்கடி இவர்களைப் பாதிக்கும். சிறிய தொல்லைகளையும் பெரிதுபடுத்தி, கவலைப்படும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்குச் சீரணக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டு.
இவர்கள் எப்போதும் உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும். வாயு பிடிப்புகளும் அவ்வப்போது தோன்றி மறையும்.அதேபோல் ராகி, கோதுமை போன்ற தானிய வகைகளையும் இவர்கள் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உணவில் புளி, காரம் போன்ற மசாலா உணவுகளை தவிர்க்கவும். தினமும் தண்ணீர் அதிகம் பருகி வர உஷ்ணம் உடலில் குறையும்.