இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகத்தில் வெளியான அதிர்ச்சி செய்தி..!!

செய்திகள்

எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.காவல்துறை மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொலன்னாவ முனையத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன மற்றும் பெட்ரோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் நிறுவன ஊழியர்கள் சிலர் எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஊடாக விசாரணை நடத்துமாறு அமைச்சர் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன மற்றும் பெட்ரோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் நிறுவன ஊழியர்கள் குழுவொன்று மார்ச் 28 ஆம் திகதி நண்பகல் எரிபொருள் விநியோக பகுதிக்குள் பலவந்தமாக நுழைந்து, அதன் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அமைச்சர் காவல்துறை மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட சில ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளின் பின்னரும் அவர்கள் தெரிவித்த கூற்றின்படி, எதிர்காலத்திலும் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஊடாக விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், எரிபொருள் விநியோக வலயங்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும் அமைச்சர் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.