இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் அழிந்து விடுமா?? ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பதிவு.!

செய்திகள்

சில தசாப்தங்களுக்கு முன்னர் உலகின் பல பாகங்களிலிருந்தும் அறிஞர்களும் கல்விமான்களும் இப்படியான கருத்துகளை வௌியிட்ட பொழுது நானும் அவற்றை நம்பி கவலை அடைந்தேன். ஆனால் உயிரிகளைப் போன்று தமிழும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறமையைக் கொண்டுள்ளது எனத் தெரிந்து கொண்டேன்.


சங்ககாலத்தில் மட்டுமே தமிழ் மொழிக்கு அரசர்களின் பாதுகாப்பும் அரச அங்கீகாரமும் இருந்துள்ளது. அந்தப் பொற்காலம் கி.மு.500ல் முடிந்து விட்டதாக அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால் கடந்த 2500 ஆண்டுகளுக்கும் மேலாக அரசர்களின் ஆதரவு இல்லாமலும் , அந்நியர் ஆட்சிகளின் கெடுபிடிகளுக்கும் மதவாதிகளின் தூண்டுதலால் நீரிலும் நெருப்பிலும் போடப்பட்ட சதிகளில் தப்பியும் தமிழ் மொழி இன்றும் தண்மையும் வண்மையும் குறையாமல் விளங்குவதைக் காணும் பொழுது தமிழின் வலிமையை என்ன வென்று சொல்வது?

இலங்கையில் தமிழ் மொழியின் தரம் பறிக்கப்பட்டு தமிழ் இன அழிப்பையும் எதிர் கொண்டது. ஆனால் இக்கால கட்டத்தில்தான் தமிழனின் புலம் பெயர்வும் அதிகரித்து தாய்மண்ணில் தமிழன் எண்ணிக்கை பத்து மடங்கு குறைந்தது. ஆனால் புலம் பெயரந்த தமிழனால் உலகில் பல்லாயிரம் மடங்கு தமிழனின் ஆள்புலம் பெருகியது.


இலங்கையில் அடுத்த ஊரில் அறியப்படாத ஊர்களின் பெயர்கள் இன்று உலகின் பெருநகரங்களில் பேசப்படும் நகரங்களாகப் பிரபலம் அடைந்து விட்டன. யாழ்ப்பாணம் சுன்னாகம் மன்னார் மட்டக்களப்பு போன்ற இடப்பெயர்கள் இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு போல உலகம் அறிந்த இடங்களாக மாறி விட்டன.

மண்ணிலும் கரும்பலகைகளிலும் மறைவாக இருந்த தமிழ் எழுத்துகள் இன்று மடிக் கணிணிகள்செல்லிடப்பேசித் திரைகளில் ஆட்சி செய்வதைக் காண்கிறோம். அடுத்த தலைமுறை தமிழ் படிக்க மறுக்கிறது என்கிற அழுகுரலும் எழும் அதே வேளையில் வலைப் பின்னலில் தமிழ் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் வளைத்துப் போடுவதையும் காண்கிறோம்.


எத்தனை கடற் கோள்களை சந்தித்த தமிழ்மண் ,இன்றும் அதன் தமிழின் இனிமை இளமை குன்றாமல் உள்ளது போல என்றும் வாழும் என்கிற நம்பிக்கையை எமக்குத் தமிழன்னை தருகிறாள். தமிழுக்கு அமிழ்து என்ற பெயருண்டு என்றார். உயிர் காக்கும் அமிழ்து எப்படி உயிரற்றுப் போக முடியும் ?