தற்போதைய நவீன காலக்கட்டத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. காதலர்களுக்கு ஸ்மார்ட்போன் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பெரும்பாலான காதலர்கள் தினமும் இரவு சாட் செய்தே தங்கள் இரவு நேரத்தை இனிமையாக்குகிறார்கள். ஆனால் சில சமயங்களில் உங்கள் மெசேஜ் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

சில நேரங்களில் நாம் உணரும் விதமும், அதை மெசேஜ் மூலம் வெளிப்படுத்தும் விதமும் ஒரே மாதிரியாக இல்லாதபோது அந்த உணர்வு அதன் அழகையும் உண்மையான அர்த்தத்தையும் இழக்க நேரிடும். நேருக்கு நேர் உரையாடல்கள் சில சமயங்களில் பயமுறுத்தும் அதே வேளையில், அது ஒரு குறிப்பிட்ட வகையான நெருக்கத்தையும் கொண்டுள்ளது,
அதே உரையாடலை மெசேஜ் மூலம் செய்யும்போது அந்த நெருக்கம் இருக்காது. குறிப்பாக சில விஷயங்களை மெசேஜ் மூலம் செய்யும்போது அது தவறான திசையில் சென்றுவிடும். சிலசமயங்களில் இது உறவுகளின் முறிவுக்குக் கூட வழிவகுக்கும். இந்த பதிவில் ஒருபோதும் மெசேஜ்களில் பேசக்கூடாத விஷயங்கள் என்னனென்ன என்று பார்க்கலாம்.

மன்னிப்புஅது எவ்வளவு நெருக்கமானதாக இருந்தாலும் சரி, முக்கியமானதாக இருந்தாலும் சரி, மெசேஜில் மன்னிப்பு கேட்கக்கூடாது. உங்கள் துணைக்கு போதுமான நேரத்தையும் இடத்தையும் கொடுத்து, அதைப் பற்றி பேசுவது நல்லது.
அவமதிப்புபொதுவாக நாம் கோபமாக இருக்கும் போது, நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் அடிக்கடி குறுஞ்செய்தியாக அனுப்புகிறோம், ஆனால் இது எதிர்முனையில் இருப்பவர்களுக்கு வேறு விதமாக புரியலாம். இது உறவை மேலும் சிதைத்துவிடும். சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் அதனை நேரில் விவரிப்பது நல்லது.
ரகசியங்கள்உங்களைப் பற்றிய முக்கியமான ரகசியங்களை எப்போதும் நேருக்கு நேராக பேசும்போது கூறுவதே சிறந்தது. குறுஞ்செய்திகள் மூலம் அவை பகிரப்படும் போது சில சமயங்களில் அது தவறான நபர்களால் படிக்கப்படலாம். எதிர்காலத்தில் இது உங்கள் இருவருக்குமே ஆபத்தாக முடியலாம்.

விரக்திஉங்களுக்குள் இருக்கும் விரக்தியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தால்,அதனை எப்போதும் நேரில் சந்தித்து செய்வது நல்லது. நமது உணர்வுகள் மற்றும் ஏமாற்றங்களை மெசேஜ் மூலம் பகிரும் போது அது தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
உண்மைகள்நீங்கள் உங்கள் துணையிடம் சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதனை நேரடியாக சந்தித்து சொல்வதே நல்லது. ஏனெனில் அது உங்களுக்கு எதிரான ஆதாரமாக எதிர்காலத்தில் மாறலாம்.

வாக்குவாதங்கள்இது காதலர்களிடையே இருக்கும் ஒரு மோசமான பழக்கமாகும். எந்தவொரு வாக்குவாதமும் மெசேஜ் செய்வதன் மூலம் முடிவுக்கு வராது. மாறாக அது பல்வேறு புதிய பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். நேராக பேசும்போது சில நிமிடங்களில் முடிந்து விடக்கூடிய வாக்குவாதங்கள் மெசேஜ் மூலம் செய்யப்படும் போது நாள் கணக்கில் நீடிக்கும்.