யாழில் நிலாவரை கிணற்றில் புதிதாக தோன்றிய புத்தர்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

செய்திகள்

யாழ் நிலாவரைக் கிணறு அமைந்துள்ள பகுதியில் நேற்று(25.02.2023) திடீரென்று புத்தர் சிலையைக் குடியேற்றி தமிழ் சிங்கள மக்களிடையே காணப்படும் நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே அவதானிக்க முடிகின்றது.


வட மாகாண ஊடக அமையம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் சிங்கள மக்களிடையே காணப்படும் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான பொருளாதார நிலைமையை மக்களிடமிருந்து மறக்கடிப்பதற்கான சதித்திட்ட நடவடிக்கையாகவே உற்று நோக்கப்படுகின்றது.

வட மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு படையெடுப்புக்களின் போதும் போற்றிப்பேணிப் பாதுகாக்கப்பட்ட நிலாவரைக் கிணற்றை தற்போதைய சகஜமான நல்லிணக்க சூழ்நிலையில் அபகரித்து அங்கு புத்தர் சிலையை அமைத்து ஒரு பகுதியினரின் மதச்சார்புடைய பகுதியாக மாற்றி அதனை அபகரிக்கும் திட்டத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட நிலாவரைக் கிணறு வடபகுதியின் ஓர் அடையாளச் சின்னமாகும். இதனைச் சீர்குலைப்பதற்கு சிங்களத் தலைமை ஒன்றின் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையே இன்று அங்கு குடியேற்றப்பட்ட புத்தர் சிலையாகும்.


வடபகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு நிகராகவே இங்கும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும், தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்ற இராணுவப் பாதுகாப்பு என்ற போர்வையில் வடபகுதிகளில் பல இடங்களில் புத்தர் சிலை குடியேற்றப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் இன, மத பேதங்களை மறந்து தங்கள் வாழ்வியலை கட்டியெழுப்பிவரும் இக்காலத்தில், புத்தர் சிலை நிறுவப்படுவது வடபகுதியிலுள்ள தமிழர்களின் அடையாளங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம்.தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு தமிழர்களின் வரலாற்றுத்தளங்கள் அபகரிப்பு என்று பட்டியல் நீண்டு செல்வதை தொடர்ந்தும் தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.


இவ்வாறு மதவாதத்தில் ஆரம்பிக்கும் அரசியல் சதித்திட்டம் இறுதியில் தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமை நல்லுறவில் பாதகமாகவும் அமைந்துவிடும்.எனவே தமிழர்களின் வரலாற்று சின்னங்களின் அடையாளங்களை அபகரிக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுவதுடன் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லுறவைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்குமாறு மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.