யாழில் இவரின் உணவகத்துக்கு சென்றுபாருங்கள் முழுமையான உண்மை விளங்கும்..!! வாழ்த்துக்கள்.!

செய்திகள்

தெல்லிப்பளைச் சந்திக்கு அருகில் இருக்கிறது நாயகி உணவகம். இங்கே ஒரு தேனீரின் விலை வெறும் 10 ரூபா மட்டுமே.அப்படியா? என ஆச்சரியத்தோடு உள்ளே நுழைந்தால், ரோல்ஸ், பற்றீஸ், வடை போன்ற இதர உணவுப் பொருட்களை வெறும் 30 ரூபாவுக்கு விற்கிறார்கள்.


யார் அந்த முதலாளி? அவரை ஒருமுறை பார்க்க வேண்டுமே என நீங்கள் நினைப்பீர்கள். அவரின் பெயர் தர்ஷன். ஓர் ஆசிரியரும்கூட.“ நாட்டின் விலைவாசி கூரையைப் பிய்த்துக்கொண்டு வானத்தை முட்டினாலும், என்னுடைய கடையில் தேனீர் 10 ரூபாதான். அதில் மாற்றமே இல்லை” என்கிறார் தர்ஷன்.

‘எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே என் கொள்கை. அதன் ஒரு கட்டமாகத்தான் இந்த குறைந்தவிலை உணவகம். மேலதிகமாக ஒரு ரூபாகூட செலவழிக்காமல், கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு, இயற்கையான முறையில் இந்த உணவகத்தை அமைத்திருக்கிறேன்.


அதனால்தான் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் குறைந்தவிலையில் விற்கிறேன்’என சிரித்த முகத்தோடு விபரிக்கிறார் இந்த ஆச்சரியமான முதலாளி.‘மயிலிட்டியில் இருந்து தினம்தோறும் தேனீர் குடிக்க இங்குதான் வருவேன்’ என்கிறார் ஒரு வாடிக்கையாளர்.

‘10 ரூபாய் என்பதற்காக தேனீரின் தரத்தை அவர்கள் குறைத்துவிடவில்லை. இஞ்சி, ஏலக்காய் எல்லாம் போட்டு சுவையாகவே வழங்குகிறார்கள்’ என்கிறார் இன்னொரு வாடிக்கையாளர். தன்னுடைய நலனை மட்டுமே கருதும் இந்த உலகில் அடுத்தவர்களைப் பற்றிச் சிந்திப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.
முதலாளி தர்ஷனுக்கு வாழ்த்துக்கள் சொல்வோம். தெல்லிப்பளையை அண்டிய பகுதிகளில் இருப்போர் ஒருமுறை அங்கு சென்று வாருங்களேன்..!!!