பொதுவாக கையில் நட்சத்திரங்கள் இருந்தால், அது மிகவும் செல்வாக்கு செலுத்தும் அறிகுறிகளாகும். அதிலும் உள்ளங்கையில் நட்சத்திர அடையாளம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமானது. நட்சத்திரங்களானது ஒவ்வொருவரின் கைகளிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதேப் போல் அது கையில் வெவ்வேறு இடங்களிலும் தோன்றக்கூடும். ஆகவே கையில் நட்சத்திரம் உள்ள இடத்தைப் பொறுத்து, அது நன்மையை அளிக்குமா அல்லது கெடுதலை அளிக்குமா என்பது உள்ளது.
கீழே உள்ளங்கையில் நட்சத்திர அடையாளமானது எந்த இடத்தில் இருந்தால் எம்மாதிரியான பலன்கள் கிட்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்கள் கையில் எந்த இடத்தில் நட்சத்திர அடையாளம் உள்ளது, அதற்கான பலன் என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சுக்கிர மேடுஒருவரது கையில் நட்சத்திர அடையாளமானது சுக்கிர மேட்டில் இருந்தால், அந்நபருக்கு எதிர்பாலினத்தவர் மீது ஆசை அதிகமாக இருக்கும். அவர்கள் காதல் மற்றும் செக்ஸ் மீது வலுவான ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். சுக்கிரன் பாலியன ஆசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், சுக்கிர மேட்டில் உள்ள நட்சத்திர
அடையாளம் அந்த உணர்வைத் தீவிரப்படுத்துகிறது. காதலிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பர். அதேப் போல் இவர்கள் எதிர்பாலினத்தவரை எளிதில் சமாதானப்படுத்தும் திறனைக் கொண்டவர்களாகவும் இருப்பர். மேலும் இவர்கள் எப்போதும் ஒரு நல்ல உடை, ஆடம்பரமான விருந்து ஆகியவற்றை விரும்புவார்கள். மொத்தத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

முதல் நிலை செவ்வாய் மேடுமுதல் நிலை செவ்வாய் மேடு தைரியம் மற்றும் வீர செயல்களைக் குறிக்கிறது. ஒருவரது கையில் நட்சத்திர அடையாளம் செவ்வாய் மேட்டில் இருந்தால், அது ஒரு நல்ல அறிகுறி. இவர்கள் தற்காப்பு கலையில் சிறந்தவராக இருப்பார். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் பிரபலமாக இருப்பார். இந்த குறி உள்ளவர்கள் போலீஸ், துப்பறியும் கிளை, ராணுவம் போன்றவற்றில் உயர் பதவியில் இருப்பார். உதாரணமாக, இந்த மாதிரியான அடையாளம் நெப்போலியனை தோற்கடித்த வெலிங்டன் டியூக்கின் கையில் இருந்தது. உண்மையில், இந்த நட்சத்திர அடையாளம் ஒருவரின் தைரியத்தையும், வீரத்தன்மையையும் குறிக்கிறது.

குரு மேடுகுரு மேட்டில் உள்ள நட்சத்திர அடையாளம், அதிக சக்தி, மரியாதை மற்றும் உயர் பதவியை உறுதிப்படுத்துகிறது. குரு மேட்டின் மேல் பகுதியில் நட்சத்திரம் இருந்தால், அதனுடன் ஆயுள் ரேகை, தலைமை ரேகை மற்றும் விதி ரேகை போன்றவை நன்கு வடிவமைக்கப்பட்டிருந்தால், அந்த நபர் எந்த துறையிலும் தனது லட்சியத்தை நிறைவேற்றுவார்கள்.
ஒருவேளை நட்சத்திர குறி குரு மேட்டின் கீழ் பகுதியில் இருந்தால், அதுவும் நல்லது தான் ஆனால் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இத்தகையவர்கள் பிரபலமான நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பார்கள். மேலும் இந்த நபர்கள் தங்களின் வாழ்க்கைத் துணை அழகாகவும், நல்ல குணம் நிறைந்தவர்களாகவும் இருக்க விரும்புவார்கள்.

சனி மேடுசனி மேட்டில் நட்சத்திர குறி இருப்பது பயங்கரமான அடையாளமாக கருதப்படுகிறது. இந்த அடையாளத்தைக் கையில் வைத்திருப்பவர்களின் வாழ்வில் விதி விளையாடும். இத்தகையவர்களின் வாழ்க்கை பயங்கரமான பேரழிவில் முடிவடையும். ஆனால் அவர்களின் பெயர் அனைவரது மனதிலும் பதிந்திருக்கும். இருப்பினும், அவர் தியானம், சந்நியாசம், மந்திரம் போன்றவற்றின் மூலம் வெற்றி பெறுவார். ஆனால் அவர்களின் முடிவு நிச்சயம் சோகமாக இருக்கும். மேலும் இவர்களுக்கு அபாயகரமான விபத்து ஏற்படக்கூடும். இந்த நட்சத்திர அடையாளம் விதி ரேகையை தொடும் போது, விபத்துக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சொல்லப்போனால் இந்த மாதிரியான அடையாளத்தை சனி மேட்டில் கொண்டவர்கள், சந்நியாசி வாழ்க்கை அல்லது துறவற வாழ்க்கையை நடத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இம்மாதிரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால், தீய விளைவுகள் அவர்களை அதிகம் அண்டாது.

சூரிய மேடுசூரிய மேட்டில் உள்ள நட்சத்திர அடையாளம், நம்பிக்கையான வாழ்க்கையின் அறிகுறியாகும். இது செல்வத்தையும், பெருமையையும் தருகிறது. இந்த அடையாளத்தைக் கொண்ட நபர் கலை, இலக்கியம், இசை மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் திறமையானவராக இருப்பார். எனவே வாழ்க்கையில் புகழ்பெற்றவராகவும், பணக்காரராகவும் மாறுவார். எதுவாயினும், இந்த நபர் வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், அவர்களுக்கு வாழ்வில் அமைதி என்பதே கிடைக்காது.

புதன் மேடுபுதன் மேட்டில் உள்ள நட்சத்திரம் மனதில் உள்ள விஷயங்களை தீர்மானிப்பதற்கும், தனித்துவமான தரத்தைப் பயன்படுத்துவதற்கும் ஞானத்தை அளிக்கிறது. இந்த அடையாளம் உள்ள நபர் வணிகம் மற்றும் வர்த்தகம், அறிவியல் அல்லது தந்திரோபாயங்களில், ராஜதந்திரப் பணிகளில் அல்லது சிறந்த சொற்பொழிவாற்றும் பணியில் அசாதாரண வெற்றியைப் பெறுவார்.

இரண்டாம் நிலை செவ்வாய் மேடுஇரண்டாம் நிலை செவ்வாய் மேட்டில் உள்ள நட்சத்திர அடையாளம் தைரியமான செயல்கள் மற்றும் கடின உழைப்பு மூலம் பெறும் வெற்றியைக் குறிக்கிறது. இத்தகையவர்கள் நிச்சயமாக மிகப்பெரிய நில சொத்துக்களைப் பெறுவார்கள்.

சந்திர மேடுசந்திர மேட்டில் உள்ள நட்சத்திர அடையாளம், மிகப்பெரிய வருமானத்துடன், படைப்பாற்றல் மற்றும் கற்பனை மூலம் பெறும் வெற்றியைக் குறிக்கிறது. இது ஒரு பிரபலமான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், ஆயுள் ரேகை மிகவும் வளைந்து சந்திரனை நோக்கி இருந்தால் மற்றும் நட்சத்திர அடையாளம் சந்திர மேட்டின் அடிப்பகுதியில் இருந்தால், இயற்கைக்கு மாறான கற்பனை அவர்களது மனதை மறைக்கும். இப்பகுதியில் உள்ள நட்சத்திர அடையாளம் தற்கொலைக்கான அறிகுறியாகும்.