யாழில் படகு உற்பத்தி செய்யும் பெண்கள்..!! குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

யாழில் படகு கட்டும் பெண்கள்.யாழ்ப்பாணம் பாசையூரில் படகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. ‘நியூ அஜஸ்மின் இண்டஸ்ரியல்’ என்பது அதன்பெயர். இங்கே பலநூறு படகுகள் தயாரிக்கப்பட்டு, யாழ், மன்னர் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மீனவர்களுக்கும், மீன்பிடி சங்கங்களுக்கும் விற்கப்படுகின்றன.


சிறப்பு என்னவென்றால், இந்தப் படகு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் அநேகமானவர்கள் பெண்களே..!நிறுவன உரிமையாளரின் பெயர் தேவகுமார். முன்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட அவர், அவை வெற்றியளிக்காத நிலையில், கடைசியில் படகு கட்டுமானத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார். அது 1998 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. இடம்பெயர்ந்து மன்னாரில் வசித்த தேவகுமார், தனது அயராத முயற்சியால் படகு ஒன்றை உருவாக்கி, அதை 48,000 ரூபாவுக்கு விற்கிறார்.

படகின் தரமும் கட்டுமான நேர்த்தியும் மீனவர்களுக்குப் பிடித்துப்போக மேலும் பல படகுகளுக்கான வேண்டுகைகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் தேவகுமாரின் படகு உற்பத்தி பெரும் வளர்ச்சி அடைகிறது.இன்று பாசையூரில் இயங்கும் இந்த நிறுவனம் அதிகளவு பெண் தொழிலாளர்களை உள்வாங்கி, பலவித மீன்பிடிப் படகுகள், உல்லாசப் படகுகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.

கண்ணாடி இழைப்படகுகளை வாங்கவேண்டுமானால் ஒருகாலத்தில் கொழும்பு போன்ற தூர இடங்களுக்குச் செல்லவேண்டி இருந்தது. ஆனால் இன்று அவை உள்ளூரிலையே, சிறந்த தரத்தில் உருவாகின்றன.
“இங்கு படகு வாங்க வருவோர் ‘இவற்றையெல்லாம் நீங்களா செய்கிறீர்கள்?’ என ஆச்சரியப்படுவார்கள்.

ஆனால் பெண்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை” என்கிறார்கள் இங்கு பணிபுரியும் பெண்கள் ஊழியர்கள். இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றிநடைபோடும் தேவகுமார் அவர்களுக்கும் அவரது ஊழியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.