திருமணமாகும் பெண் மூல நட்சத்திரத்திலிருந்தால் மாமனாருக்கு ஆகாத??? ஆன்மீகம் உணர்த்தும் உண்மைகள்..!!

ஜோதிடம்

மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது என்றால் அனைவரும் கவலை கொள்வார்கள் அதற்கு காரணம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்க கூடாது. எனவே அவர்களுக்கு வரன் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுவார்கள். மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் ஆன்மீக உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.


ராசி பட்டியலில் 9வதாக வருவது தனுசு ராசி, ஒன்பதாக வீட்டில் முதல் நட்சத்திரமாக வரும் மூல நட்சத்திரம் பல்வேறு யோகங்களை வழங்கக்கூடியது. இதனால் பூர்விக சொத்துக்கள், தந்தை வழியில் நல்ல ஆலோசனையும், பரம்பரம்பரை பரம்பரையாகத் தொடரக்கூடிய ஆணி வேர் போன்றது தான் தனுசு ராசியின் மூல நட்சத்திரம்.

27 நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். இது ஒரு பெண் நட்சத்திரமாகும். இந்த மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்கு உரியதாகும். மூலம் நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும்.

பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழியை வழக்கம்போல் தவறாகப் புரிந்து கொண்டதுதான்.’நிருத்தி திக்கில் இருக்கும் மூலப் பிரபுவை வணங்கிய பெண் நலம் பெறுவாள்,’ என்பதே இந்தப் பழமொழியின் உண்மைப் பொருள். நிருதி திக்கு என்பது தென் மேற்கு திசை, இது கன்னி மூலை என்றும் வழங்கப்படும். மணமாகாத கன்னிப் பெண்கள் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் கணபதியை வணங்கினால் அவர்களுக்கு எளிதில் திருமணம் கை கூடும் என்று ஜோதிடர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் சிறப்பாகும். மூல நட்சத்திரத்தில் நிறைவேற்றும் நற்காரியங்கள் பன் மடங்காக விருத்தியாகும் தன்மை உடையன. மூல நட்சத்திரத்தில் ஒரு தங்கக் காசு வாங்கினால் மூன்று காசு வாங்க வசதி வரும். மூல நட்சத்திரத்தில் தொடங்கும் வியாபாரம், தொழில் முயற்சிகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று சிறப்படையும். வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களை மூல நட்சத்திரத்தன்று வாங்கலாம். அது குறைவில்லாமல் இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் காரிய சாதனைகள் புரிவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். அன்னை சரஸ்வதியும் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர்தான். புரட்டாசி மாதம் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். காரிய சாதனைகள் பல புரியவல்லவர்கள் மூல நட்சத்திரக்காரர்கள்.120 ஆண்டுகள் மனித உடலில் வாழ்ந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் மற்றவர்களுக்காக தன் உடலைப் பாதுகாத்து அருள்புரியும் உடையவர் என்னும் ராமானுஜர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரே.


மூல நட்சத்திர பெண் சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக இருப்பதால், அவள் திருமணம் செய்து, வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு தனது புத்திசாலித் தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்களாவும் இருப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்வார்கள். அப்பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் மாமனார் ஏற்றுக் கொள்ள மறுப்பார் இதற்கு காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்று நினைப்பார். இதனால் மாமனாருக்கும், மருமகளுக்கும் அதிகமாக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் ஜோதிடத்தில் மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனார் இறந்து விடுவார் என்று குறிப்பிடுகின்றனர். எனவே மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனாருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதே உண்மை ஆகும்.


ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்! என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதுவும் தவறானதே.
பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை மக்கள் ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால் ‘ஆண் மூலம் அரசாளும்’ என்றாகிவிட்டது.

பண்டைய நூல்களில் ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்பது மருவி ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம் என்றாகி விட்டது. ஆனி மூலம் நட்சரத்தில் பிறந்தால் அரசு அரசு சார்ந்த துறை இவருக்கு சாதகமாக அமையும் என்பதே விளக்கமாகும். பின்மூலம் அடுத்தடுத்த மாதங்களில் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் எதிரிகள் நிர்மூலமாகி விடுவார்கள் என்பதே உண்மையான வழக்கு.

கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி ‘கன்னி மூலம் நிர்மூலம்’ எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு ‘பெண் மூலம் நிர்மூலம்’ என்றாகிவிட்டது.

திருமணத்தின் போது எல்லா நட்சத்திரத்திற்கும் பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும். ஒரே நட்சத்திர ஆண் பெண் ஜாதகத்தை இணைக்கக்கூடாது என்பதும் ஜோதிட விதி. ஆனால், மூல நட்சத்திர ஜாதகம் வந்தால் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மூல நட்சத்திர பெண்ணுக்கு மூல நட்சத்திர ஆண் ஜாதகத்தை தாராளமாகச் சேர்க்கலாம்” என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி. எனவே மூலம் நட்சத்திர வரன் வந்தால் கவலையே படாதீர்கள்.


சாஸ்திரங்களுக்கு முதன்மையானவரான குரு பகவான் வீடுதான் தனுசு ராசி. அந்த தனுசில் முதல் நட்சத்திரமாக இருப்பது தான் மூல நட்சத்திரம். பரிசுத்தமான உன்னதமான நட்சத்திரம் மூலம். இந்த மூல நட்சத்திரம் சிங்கத்தின் வால் போன்றும், மலை போன்ற யானையை அடக்கும் அங்குசம் போலவும், ஒய் (y) வடிவத்தையும் கொண்டிருக்கும்.

இதன் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம். மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகும். எனவே 27 நட்சத்திரங்களில் எல்லா நட்சத்திரங்களுமே சிறப்பு வாய்ந்தவைதான்.