சுயதொழில் செய்து சாதிக்கும் பாடசாலை ஆசிரியை.திருமதி சர்மினி தியாகரன் என்று ஓர் ஆசிரியை, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். ஆனால் அதுமட்டும் அவரது தொழில் இல்லை. அவர் ஒரு தொழிற்சாலை வைத்து நடத்துகிறார். தென்னம் தும்புகளினால் ஆன பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அது. பல பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்திருக்கிறார்.

ஆசிரியையாக வருவதற்கு முன்னர், யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் உள்ள யூனியன் குளம் எனும் சிறுகிராமத்தில், இவரது தொழிற்சாலை இருக்கிறது.
அயலட்டை கிராமங்களிலிருந்து தேங்காய் மட்டைகளைச் சேகரித்தும், கொள்வனவு செய்தும் அவற்றைப் பதப்படுத்தி கயிறுகள், துடைப்பங்கள் போன்ற பல பொருட்களை உற்பத்தி செய்கிறார். இவரது முயற்சிகளுக்கு இவரது கணவர் தியாகரன் பக்கபலமாக இருக்கிறார். தொழிற்சாலைக்கான இயந்திரங்களை வாங்குவதற்காக இருவரும் பல இடங்களுக்கு, பல நாட்கள் அலைந்து திரிந்ததாக சர்மினி குறிப்பிடுகிறார்.

அவர் குறிப்பிட்ட இன்னொரு விடயம் நமது கவனத்தை ஈர்த்தது: ‘தும்பினால் செய்யப்படும் பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு எமது பகுதியில் குறைவாகவே உள்ளது. மக்கள் ப்ளாஸ்டிக் பொருட்களையே அதிகம் வாங்குகிறார்கள்.

எனவே எமக்கான சந்தை வாய்ப்பை, வடபகுதிக்கு வெளியே தேடவேண்டியுள்ளது’ என்று ஆதங்கத்தோடு குறிப்பிடுகிறார் அவர்.ஆசிரியை, தொழில்முனைவோர் என வெவ்வேறு பாத்திரங்களில், விடாமுயற்சியோடு இயங்கும் திருமதி. சர்மினி தியாகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
