மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலை வரலாற்றில் சுமார் 57 வருடத்துக்கு பின்னர் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிஷோக்குமார் கிஜோன்சன் என்ற மாணவனே இவ்வாறு 148 புள்ளிகள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.1965ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை வரலாற்றில் 57 வருடங்களுக்கு பின் முதல் தடவையாக குறித்த மாணவன் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேற்படி மாணவன், தாயின் பராமரிப்பில் எவ்வித வசதிகளும் இல்லாமல் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வருவதாக் கூறப்படுகின்றது.பல்வேறு கஷ்டங்களுடன் தனது கல்வியை கற்று சாதனை படைத்த மாணவனின் கல்வியை தொடர்வதற்கும், குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு உதவுமாறு பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவனின் அயராது உழைப்பும், குடும்பத்தாரின் கற்றலில் கொண்டுள்ள அக்கறையும், வகுப்பாசிரியரான வி.கங்கேஸ்வரன் அவரோடு ஏனைய அசிரியர்களின் முயற்சியும், அதிபரின் வழிநடத்தலும், பாடசாலைக்கு கிடைத்த வெற்றிச் சாதனையாகும்.
இப் பாடசாலையானது கல்குடா வலயத்தில் கோறளைப்பற்று பிரதேச பாடசாலைகளில் கஷ்ட பிரதேச பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பாடசாலையில் பௌதீகவளங்கள், கற்றல் கற்பித்தல், ஏனைய இணைப்பாட விடயங்களிலும் பாடசாலை வளர்ச்சி கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.பாடசாலைக்கு வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டிய மாணவனுக்கும் அவரது பெற்றோருக்கும் ஆசிரியர்களும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.