யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மணியந்தோட்டம் எனும் சிறுகிராமத்தில் தும்புத் தொழிற்சாலை ஒன்று உண்டு. இங்கு பல்வேறு அளவுகளிலான கயிறுகள், கால்மிதிகள் என தும்புப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சியில் ஈடுபடும் அனைவரும் பெண்களாவர்.

தொடக்கத்தில் தேங்காய் மட்டைகளைச் சேகரித்து, அவற்றை கடல்நீரினுள் அமிழ்த்தி ஊறவைத்து, கைகளால் அடித்துத் தும்பாக்கி, பின்னர் அதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்துவந்திருக்கிறார்கள்.தற்போது இயந்திரங்களைப் பயன்படுத்தி, தும்புகளை எடுக்கிறார்கள்.

இவர்கள் உற்பத்தி செய்ததுபோக, எஞ்சிய தும்பினை அயலட்டையிலுள்ள கிராமங்களுக்கு விநியோகித்து, அங்கு குடிசைத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இதனால் பயன்பெறுகிறார்கள்.

தொழிற்சாலையில் எஞ்சும் தும்புக்கழிவுகளை, பூக்கன்றுகளுக்கும் வீட்டுத்தோட்டங்களுக்கும் எருவாகப் பயன்படுத்துகிறார்களாம். வறுமையும் ஆதரவற்ற நிலையும் இருந்தபோதும்கூட, அவற்றையெல்லாம் கருத்திலெடுக்காது, தம் உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்தும் இந்தப் பெண்களும் கிராம மக்களும் பாராட்டுக்குரியவர்கள்.

