நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவிக்கையில், தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் உட்பட பல குழுக்களுடன் பேசியதாகவும், முடிந்தவரை விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
பேருந்தில் ஏறக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிர்ணயித்துள்ளதாகவும், இதன் விளைவாக, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு நிறுவகத்தின் தலைவரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷங்க இந்தக் குழுவிற்குப் பொறுப்பேற்றுள்ளதாகவும், ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மோட்டார் வாகன திணைக்களத்தின் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) டி.குசலனி டி சில்வா, ஸ்ரீயானி ஹேவகே, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் எச்.ஆர்.பசிந்து, கல்வி அமைச்சின் பாடசாலை விவகார பிரதிப் பணிப்பாளர் இந்திக ஹபுகொட மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரல ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி நானுஓயா – ரதெல்ல பகுதியில் கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதன்போது, வானில் பயணித்த 9 பேரில் ஆறு பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.வானில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், முச்சக்கரவண்டி சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.