லண்டனில் பரபரப்பாக காணப்படும் சோஹோ பகுதியின் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கு வசிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து , நீரைத் தெளித்தால் அதனை வந்த திசையிலேயே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான பெயிண்ட் ஒன்றை முதற்கட்டமாக சோஹோவில் உள்ள முக்கியமான 10 இடங்களில் உள்ள சுவர்களில் அப்பகுதி நகரசபை சார்பில் பூசப்பட்டுள்ளது.

பூச்சு பூசப்பட்ட சுவர்கள் மீது யாராவது சிறுநீர் கழித்தால், சுவர் மீது விட்டெறியப்பட்ட பந்து திருப்பி வருவது போல அவர்கள் கழிக்கும் சிறுநீர் அவர்கள் மீதே தெறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்றும் இதனால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் லண்டன் மாநகர அதிகாரிகள் நம்புகின்றனர்.
