வீட்டில் பார்த்து திருமணம் செய்த மகளுக்கு அம்மா எழுதிய உருக்கமான கடிதம்..!! கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!!

செய்திகள்

அன்புள்ள மகளுக்கு,அம்மா எழுதிக்கொள்வது. நலம் நலமறிய ஆவல். உன் விருப்பம் போலவே உனக்கொரு வரன் வந்திருக்கிறதை கண்டு அப்பாவும் நானும் மிகவும் மகிழ்ச்சியுற்றோம். வெகுவிரைவில் உன் திருமணத்தை காண ஆவலாக உள்ளோம். நீ பக்குவப்பட்டிருப்பாய் என தெரிந்தும் சில குறிப்புகளை எழுதுகிறேன். மனதில் வைத்துக்கொள்.


வருடம் முழுவதும் மீனை எதிர் பார்க்காதே. சோற்றில் சாமபாரை பார்த்ததும் என்னிடம் சண்டையிடுவது போல் சண்டையிடாதே. இனியாவது தட்டில் வைக்கும் அத்தனையையும் சாப்பிட கற்றுக்கொள்.25 வருட உணவு சுவையில் பெரும் மாற்றம் வரும். அது சரி, நீ காபியே அடுத்தவர் வீட்டில் குடிக்க மாட்டாய் சுவை மாறும் என்று. என் அன்பு மகளே, எல்லா சுவையும் சுவையே என்று ஏற்றுக்கொள்.

இது வரை நீ ஓடி ஆடிய வீதி போன்று இருக்குமா? இதுவரை நீ பழகிய மனிதர்கள் போன்று இருப்பார்களா? புது மனிதர்கள் என்று அச்சம் கொள்ளாதே. அன்பு அகில உலகத்திற்கும் பொதுவானது தானே? அவர்களும் மனிதர்கள் தானே? அன்புடன் எவரையும் எதிர்கொள்.அன்பினால் உலகையே ஆளலாம் ஒரு குடும்பத்தை ஆண்டுவிட முடியாதா உன்னால் ?


அடிக்கடி எனக்கு போன் செய்து உன் புகுந்தகத்தில் நடப்பதை என்னுடன் பகிர்ந்துகொள்ளாதே. அது உன் கணவனுக்கு சலிப்பை தரும். புகுந்தகத்தில் நடப்பதை பிறந்தகத்திற்குள் கொண்டு வராதே.உனக்காக ஒட்டு மொத்த குடும்பமும் அனுசரிக்க வேண்டும் என்பதை விட அவர்களுக்காக நீ ஒருத்தி அனுசரித்து செல்லலாம். தவறில்லை.

எவரையும் இவர் இப்படி தான் என்று நீயாகவே நியாயம் தீர்த்துவிடாதே . எல்லோரும் சந்தர்ப்பவாதிகளே. கொஞ்சம் பொறுத்திருந்து வேடிக்கை பார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதம் இருக்கும். அதை அவர்களிடம் புகழ்ந்து பேசு. பிறகென்ன நீ புகுந்தகத்திலும் ராஜாத்தி தான்.


குடும்பத்திற்குள் சென்ற உடனே குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் உன்னிடம் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணாதே. உன் மாமனார் மாமியார் கணக்கில் ஒரு குழந்தை பெற்று, பள்ளி அனுப்பும் வரையில் நீ ஒன்றும் அறியாத பெண் தான். காலம் மாறும். குடும்ப தலைவியாக நீயும், குழந்தைகளாக உன் மாமனார் மாமியும் மாறுவார்கள் அதுவரை பொறுத்திரு.

உன் விருப்பங்களனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டது போலவே அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏங்காதே. ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆதங்கம் கொள்ளாதே. காலை காபிக்கு பதில் அங்கு டீ தான் என்றால் ஏற்றுக்கொள். உன்னால் முடியும் அத்தனை வலிமையையும் உனக்குள் இருக்கிறது.

தங்கை மீது உன் கணவனுக்கு பாசம் அதிகம் என்றால் ஆதங்கம் கொள்ளாதே. அன்புக்கு அணை கட்டாதே. அது அப்படியே இருக்கட்டும். நாளை உன் மகனும் உன் மகள் மீது அதே அன்பை செலுத்துவான். அன்னையாக நீ மகிழ்வாய் அதை காணும்போது.


எதை செய்தாலும் உன் கணவனிடமேனும் தெரியப்படுத்திவிடு. ஒளிவு மறைவின்றி வாழ்வது தான் திருமண பந்தத்தின் அஸ்திவாரமே.ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை பெருக்கு.வீணாக இனி எதையும் தூக்கி போடாதே. வீணானதென்று இங்கு ஒன்றும் இல்லை. பொருட்களை பத்திரப்படுத்த கற்றுக்கொள்.

இது தான் எனக்கு பிடித்த கலர் இது எனக்கு தான் வேண்டும் என்று உன் பிறந்தவர்களிடம் மல்லுக்கட்டுவது போல் அங்கும் மல்லுக்கட்ட நினைக்காதே. இனி நீயும் விட்டுக்கொடுக்க பழகிக்கொள்.உன் நண்பர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டது போல உன் புகுந்தகத்திலும் ஏற்றுக்கொள்ளவார்கள் என கனவு காணாதே. உன் நண்பர்கள் நீ சம்பாதித்த சொத்து அதை பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு.

அரக்க பறக்க ஓடும் ஓட்டத்தில் பட்டனை தைத்துக் கொடு என்று பாட்டியையும் வேலை வாங்குவாயே அதை நிறுத்திவிடு உன் வேலைகளை பிறர் உதவியின்றி செய்ய கற்றுக்கொள்.பின்னாடியே வந்து ஊட்டிவிட்டு உன்னை கல்லூரிக்கு அனுப்ப இனியும் நீ குழந்தை அல்ல. உன்னை இனி நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும்.


ரசத்தையும், சட்னியையும் கொதிக்க விட்டுவிடாதே. பருப்பை நன்கு வேக விடு. உன் அவசர Bachelor Room சமையலை புகுந்தகத்தில் காட்டிவிடாதே அன்பு மகளே.யூடியூப் பார்த்தேனும் நிதானமாக சமைக்கக் கற்றுக்கொள்.

உன் அப்பாவை நீ இங்கேயே விட்டு விட்டு தான் செல்ல போகிறாய். எனவே இனி பொறுப்புணர்ந்து செயல்படு.
படித்தவள் என்னும் கிரீடத்தை இறக்கி வைத்துவிட்டு காலடி எடுத்து வை. உன் 400 பக்க புத்தகமும் உன் மாமனார் மாமியாரின் 40 வருட அனுபவமும் ஒன்றல்ல.

உன்னை அழகாக வைத்துக்கொள்வது போலவே உன் இருப்பிடத்தையும் வைத்துக்கொள்.வீட்டிற்கு வரும் உன் கணவனின் சகோதரிகளை வெறுமையாக ஒருபோதும் அனுப்பி விடாதே. பிறந்தகத்திலிருந்து ஏதேனும் கொண்டு செல்வது அவர்களுக்கு பெருமை மட்டும் இல்லை அது அளவுகடந்த மகிழ்ச்சியே.உறவினர் கண்டு ஓடி ஒளிந்துகொள்வதை இனியும் நீட்டிக்காதே. விருந்தினருக்கு வந்தனம் செய்.

அவர்களை அவமதிக்காதே.உதட்டோரம் ஒரு புன்னகையை எப்பொழுதும் உதிர்த்துக்கொண்டே இரு. அது தான் எங்கள் மகிழ்ச்சியே.உணவருந்தும் முன் வீட்டில் அனைவரும் உணவருந்தி விட்டார்களா? என கேட்டு உணவருந்து. மேசை முன் அனைவருக்காகவும் காத்திருக்கவும் பழகிக்கொள்.


எதை சமைத்தாலும் வீட்டில் முதியவர்களுக்கு முதலில் கொடுத்து விடு.குடும்பம் என்ற அமைப்பு சமூகத்தில் இன்னும் இருப்பதற்கு காரணம் பெண்கள் நாமே. அதில் இனி நீயும் முக்கிய பங்கு என்பதை மறந்துவிடாதே. இதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்.

உன் கனவை யாருக்காகவும் கனவாகவே ஆக்கிவிடாதே. பறந்துகொண்டே இரு இன்னும் உயர உயர.மேற்சொன்ன அத்தனையும் வாசிக்க எளிது தான். அத்தனையையும் எதிர் கொள்ளும் மன வலிமையை இறைவன் பெண்ணுக்குள் அதிகம் வைத்திருக்கிறான் என்பதற்கு இவ்வுலகம் சான்று கொடுக்கும். உனக்கு மனவலிமை அதிகம். பயப்படாதே.மணமாக தயாராக இருக்கும் மகளே உனக்கு என் வாழ்த்துக்கள்.
அடுத்த மடலில் இன்னும் எழுதுகிறேன்.அன்புடன்,அம்மா.LkInfo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *