கூகுளிடம் ஆனையும் அல்பேர்ட்டையும் தேடிய எமது பிள்ளைகள் இனி சங்கிலியனையும் இராவணனையும் தேடப்போவது நல்லதொரு மாற்றமாகும்.ReeCha வில் என்னைக் கவர்ந்த முக்கிய விடயமே தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்தான்.

இங்கே ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாகக் கருதி, பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களைப் பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பையும் எழுதி, அசத்தியிருக்கிறார்கள்.

எமது பிள்ளைகளுக்கு இவற்றைக் காட்டி ‘குளக்கோட்ட மன்னன் பல குளங்களைக் கட்டி விவசாயத்தை பெருக்கினார்’ என்றும் ‘பண்டாரவன்னியன் வீரத்தில் சிறந்தவர். அவர் போர்த்துக்கேயரை எதிர்த்து போரிட்டார்’ என்றும் அறிமுகம் செய்யும்போது அதில் பெருமையும் உரிமையும் இருக்கும். பிள்ளைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும்.

வெளிநாடுகளில் இதைத்தான் செய்கிறார்கள். இங்குள்ள கல்விமுறையின் அடிப்படையே நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் புகுத்துவதுதான். பூங்காக்களிலும் தெருக்களிலும் மற்றும் திரும்பும் திசை எல்லாம் சிலைகளையும் நினைவிடங்களையும் நிறுவி, வரலாற்று நாயகர்கள் அனைவரையும் பிள்ளைகள் மனதில் பதித்துவிடுவார்கள்.

இதே முயற்சியை, தமிழ் சார்ந்து ReeCha முன்னெடுப்பது பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய விடயமாகும்.தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, உல்லாசப் பயணிகளாக வரும் வெள்ளையர்களையும் இந்த முயற்சி ஆச்சரியப்படுத்தும்.

காரணம் வரலாற்றை அறிவதிலும் அந்தக்கால ஆட்சிமுறைகளைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கூகுளிடம் போய் ஆனையும் அல்பேர்ட்டையும் தேடிய எமது பிள்ளைகள் இனி சங்கிலியனையும் இராவணனையும் தேடப்போவது நல்லதொரு மாற்றமாகும்.

