Freelancer என்ற வகையில் இந்த கேள்விக்கு பதில் கூற விழைகிறேன். இங்கு கூறப்படுபவை என் சொந்த அனுபவத்தில் இருந்து விளைந்தவை மட்டுமே.எனக்குத் தெரிந்த சில விதிகளைப் பின்பற்றி பாருங்கள்:

எக்காரணம் கொண்டும் யாருக்கும் பணம் செலுத்தி ஒரு வேலையினைப் பெற மாட்டேன். வேண்டுமானால் என் திறமையினை நிரூபிக்க ஒரு Sample/Trial வேலையினை சிறிதளவில் செய்து கொடுப்பேன். என் திறமைக்கு கிடைக்காத வேலை என் பணத்திற்கு கிடைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
ஏனெனில் இங்கு அநேக ஏமாற்றுக்காரர்கள் நிலவுவதுண்டு, தட்டச்சு செய்தே வீட்டிலிருந்து 50,000 சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்து எளிதில் ஆயிரங்களை இழப்போரையும் பார்த்திருக்கிறேன். பலரை அதிலிருந்து மீட்டிருக்கிறேன். உழைத்ததற்கு பணம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும்.
உங்களின் திறமைகள் என்ன? ஆயிரம் பேர் என்னுடன் போட்டி போட்டாலும் என்னால் இச்செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று எண்ணும் திறமை எது?குரல் வளம், புகைப்படக் கலைஞர்கள் என பல்வேறு விதமான தனித் திறமைகளைக் கொண்டவர்கள் இத்தொழில் சாதிக்கின்றனர். திறமை இல்லாமல் இக்காலத்தில் முன்னேறவே முடியாது ஏதாவது ஒரு துறையில் வல்லுநராக இருக்க வேண்டும்.

நேர மேலாண்மையும் குறித்த நேரத்தில் சொன்ன வேலையினையும் செய்து முடித்து கொடுக்க வேண்டும்.Freelancing மூலம் நீங்கள் எங்கு வேலைக்கு சென்றாலும் வேலையினை உங்களுக்கு அளிக்கும் தளம் நிச்சயம் ஒரு கமிஷனை எடுத்துக்கொள்வார்கள். உதாரணமாக upwork எனப்படும் பிரபலமான Freelancing தளம் புதிய வேலைகளில் 20% மற்றும் ஏற்கனவே இருக்கும் வேலையில் 1000$ க்கு மேல் சம்பாதித்த பின்னர் 10% என கமிஷன் பெற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் 1000 ரூபாய் இதன் மூலம் சம்பாதித்தால் 100 ரூபாய் குறைந்த பட்சம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
முற்காலம் போன்று தற்போதில்லை அதிகளவிலான போட்டிகள் நிலவுகிறது. அதேசமயத்தில் கடின வேலையினை செய்ய பலர் முன்வருவதில்லை. Freelancing இல் பெரும்பான்மையானோர் நினைப்பது தட்டச்சு செய்து, நகலெடுத்தல், இணைய உலாவல்…. உண்மயில் இவ்வேலைகளில் மிகவும் சொற்பமாகவே கிடைக்கும்.
கூகுள் ஆட்சென்ஸ் தமிழ் – தொடர்ந்து உங்களால் தனித்தன்மையாக பொருளடக்கம் அடிப்படையில் குறிப்பிட்ட

விஷயங்கள் குறித்து எழுத முடிந்தால் கூகுள் ஆட்சென்ஸ், யுடியூப் வருமானம் மூலம் சம்பாதிக்கலாம். ஆனால் இதற்கு வாடிக்கையாளர் வருகைக்கு கூவி கூவி வரவைக்க வேண்டும். 100$ சேர்ந்த பின்னரே பணம் அனுப்புவர். விடா முயற்சியும் தனித்தன்மையும் இருந்தால் இதில் சம்பாதிக்க வாய்ப்புண்டும்.எடுத்த உடனே அதிக சம்பளத்தில் வேலை கிடைக்காது… பொறுமை மற்றும் வேலையில் துல்லியம் மிக முக்கியம்.
நான் 18 வயதில் இருக்கும்போது முதன் முதலாக Freelancing மூலம் பணம் சம்பாதிப்பது குறித்து இணையத்தில் பார்க்க, தேட ஆரம்பித்தேன். எங்குமே பணம் கட்டவில்லை. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு தேடலுக்குப் பின்னர் ஒரு நிலையான வருவாயுடன் தொழிலாக எனக்கு அமைந்தது. தற்போது நான் உதவி பேராசிரியராக பணி புரிந்த தொழிலை விட்டுவிட்டு சுயமாக வேலை செய்கிறேன். குடும்பத்துடன் பெருமளவில் குடும்பத்துடன் நேரத்தினை எனக்கு பிடித்தாற்போல செலவிடுகிறேன். சில வேளைகளில் நள்ளிரவு கூட வேலை செய்ய வேண்டிவரும்.

என்னதான் இருந்தாலும் நமக்கு பிடித்த வேலைகளை, நமக்கு பிடித்த நேரத்தில் செய்வது ஒரு தனிசுகம் தான்.இவ்வளவுதூரம் நான் வளர்ந்துவர முக்கியக் காரணம் என் தமிழை நான் விட்டுக்கொடுக்காதது மட்டுமே. தமிழ் வழியில் கல்வி பயின்ற நான் ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பாளராகவே இத்தொழிலில் இறங்கினேன். இதன் பல பரிமாணங்களாக தற்போது பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். நேற்றிரவு கூட ஒரு
தளத்தில் குரல் வளத் தேர்விற்காக எனது குரலை அனுப்பி இருக்கிறேன். Dubsmash, Sfera Studios, Peat clouds, Mturk, Crowdsurf, போன்ற பிரபலமான தளங்களில் தமிழ் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்திருக்கிறேன். இவை தவிர தமிழ் செய்திகள் கொடுப்பது, இணையதள பரிந்துரைகள், தரம் பிரித்தல், பிழை கண்டறிதல் என பல்வேறு இணையதளங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
ஒருமுறை எனக்கு வேலை கொடுத்தவருக்கு பணி நீக்கம் ஏற்பட்டதால், கண்டிப்பாக சம்பளம் வேண்டுமா என்றார், விவரம் அறிந்து பின்னர் 2000 ரூபாயினை வேண்டாம் என்றேன். மொத்த சம்பளமே அதுதான்.லிங்க்டுன்னில் தொடர்புகளை பிரித்து தர சொன்ன ஒரு வாடிக்கையாளர் ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் சம்பளம் என பேசி, கைப்பேசியில் வேலை குறித்து அழைக்கும்போதெல்லாம் திட்டுவார். எவ்வளவு கோபம் வந்தாலும் அதை சமாளித்து அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்த பின்னர் ஆளையே காணும். சுமார் 33 மணி நேரத்திற்கு சம்பளம் பாக்கி. இப்படியும் இருப்பார்கள்!

இவை எல்லாம் நான் சொல்லக் காரணம் என்னை விட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள், விடாமுயற்சியும், நேர்மை, உழைப்பும் இருந்தால் கிடைத்த வேலையினை பிடித்த வேலையாக மாற்றி உங்களாலும் வேலை செய்ய முடியும். திறனை வளர்த்துக்கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்!