தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டப்படுகிறது. மார்கழி கடைசி நாள் தீமைகள் நம்மை விட்டு அகல போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் தமிழர்களின் திருவிழாவாக தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்து 3 மற்றும் நான்காம் நாள் மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்படும்.

பொங்கல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சர்க்கரை பொங்கல் மற்றும் இனிக்கும் கரும்பு. நாம் பொங்கல் வைக்கும்போது கரும்பை பொங்கல் பானைக்கு அருகில் வைத்து வழிபடுவோம். ஆனால், கரும்பு ஏன் பொங்கலுக்கு இன்றியமையாதது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஆம், இந்த கரும்பு பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருப்பதற்கு காரணம் உள்ளது. பொங்கல் பண்டிகையை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிட்டு தமிழர்கள் இந்த விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். கரும்பு பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருப்பதற்கான காரணம் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
சிவனுடன் தொடர்புடைய கதைகரும்பு இனிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. ஆனால் பொங்கலின் போது கரும்பு பரவலாக பயன்படுத்தப்பட்டதற்கு சிவனுடன் தொடர்புடைய ஒரு கதையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு பெரும் பொங்கல் நாளில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள யானையின் கல் உருவத்திற்கு கரும்பு ஊட்ட சிவபெருமான் அற்புதங்கள் செய்ததாக கூறப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் கோயிலில் நிகழ்வின் அடிப்படையில் ஒரு கல் செதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு ஏன் முக்கியம்?பொங்கலுக்கு கரும்பு முக்கியமானது. செங்கரும்பு மற்றும் நாட்டு கரும்பு வைத்து சூரியன் மற்றும் மாடுகளை நாம் வணங்குகிறோம். கரும்பை கடிக்காமல் பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடுவதில்லை. நாம் கரும்பை சுவைப்பதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. ஆம், கரும்பின் எல்லாப் பகுதியும் இனிப்பைத் தருவதில்லை. நுனிக் கரும்பு லேசான இனிப்புடன் அதிக அளவில் உப்புக் கரிப்பதுபோலிருக்கும். நடுக்கரும்பு கொஞ்சம் இனிமையாக இருக்கும். ஆனால், அடிக் கரும்புதான் மிகவும் இனிப்பாக இருக்கும்.

கரும்பு சொல்லும் தத்துவம்அதுபோல வாழ்க்கையில் நாம் அனைவரும் முன்னேற கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். கடின உழைப்பு நுனிக்கரும்பை போல ஆரம்பத்தில் இனிமை தராது. ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போல அதிக வெற்றியையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு தரும்.
இந்த தத்துவத்தை வயதில் மூத்தவர்கள் மற்றும் பெரியவர்கள் நமக்கு கூறுவார்கள். மேலும் கரும்பின் வெளிப்புறம் கடினமாகவும், கரடுமுரடாக வளைவுகளும், அரிப்பை ஏற்படுத்தும் முட்கள்கொண்ட தோகையை கொண்டிருக்கும். கடினமான தோற்றத்தை வெளிப்படுத்தும் கரும்பை உடைத்து சுவைப்பது நமக்கு கொஞ்சம் சிரமம்தான். ஆனால், அதை செய்யும்போது உட்புறத்தில் இருக்கும் இனிமையான கரும்பு சாறு கிடைக்கும்.
இனிமையான வாழ்க்கைஅதுபோல வாழ்க்கையில் எத்தனை கடுமையான சோதனைகள் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றைக் முயற்சியோடு கடந்து செல்ல வேண்டும். அந்தக் கரடுமுரடான பாதையை சலிப்பின்றி கடந்து சென்றால் இனிமையான வாழ்க்கை நீங்கள் பெற முடியும் என்பதுதான் இந்த கரும்பு உணர்த்துகிறது. பொங்கல் பண்டிகையில் மட்டுமல்லாது, அனைத்து நாளும் இது ருசிக்கப்படும். ஆனால், தமிழர்களின் வாழ்வோடு பண்பாடோடு கலந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் கரும்புக்கு உண்டு.
இறுதி குறிப்புகரும்பைத் தவிர, பொங்கலின் போது சில மஞ்சள் கொத்து, மா இலை, ஆவாரம் பூ, வாழை இலை மற்றும் வாழைப்பழம் வைத்து இறைவனை வழிபடுகிறார்கள். இது தீமைகளை விலக்கி நன்மையளிக்கும் என்று நம்பப்படுகிறது, எனவே இது வீடுகளின் முன் வைக்கப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உள்ளதாக நம் முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.