இப்ப எல்லாம் நிஜ தேவதைகளையும் நிஜ ஆண் அழகர்களையும் நேடியாகச் சந்திக்கிறேன்.இருமிக்கொண்டே Ward ல இருக்கிற அப்பாவ பராமரிக்கிறதுக்காக பக்கத்திலயே ஏக்கத்தோட காத்திருக்கிற மகன் / மகள்.

மூச்செடுக்க கஷ்டப்படுற அம்மாவுக்காக Ward ல கூடவே இருந்து நித்திரை கொள்ளாம சோர்ந்து போன கண்களோட காத்திருக்கிற மகன் / மகள்.கதைக்கவே கஷ்டப்படுற இளந்தாரி மகன எப்பிடியும் எழும்பி நடக்க வைப்பன் என்டு இப்பயும் ஏதோ ஒரு உருவமில்லாத கடவுள வேண்டிக் கொண்டு கட்டிலுக்குப் பக்கத்திலயே வெறிச் சோடின முகத்தோட காத்திருக்கிற வயதான அம்மா / அப்பா.
வீட்டில என்னதான் அடிபட்டுத் தீர்ந்தாலும் கூடப்பிறந்தவனுக்கு ஒன்டு என்டதும் வெளிய சொல்ல முடியாத கவலையோட வந்த கண்ணீர உள்ளயே அடக்கி வச்சிட்டு பகத்திலயே நின்டு பாத்துகொள்ளுற
சகோதரர்கள்/சகோதரிகள்.
குடிச்சிட்டு வீட்டுக்கு வரேக்க எல்லாம் எவ்வளவோ சண்டை போட்டாலும்… முடியாம Ward ல படுத்திருக்கிற கணவன்ட கையப்பிடிச்சுட்டே.. அவன் கஷ்டப்பட்டு இருமும் போதெல்லாம் நெஞ்சை அழுத்தித் தேய்த்துக் கொண்டிருக்கும் சாதுவாய் தலை நரைத்த மனைவி.

வீட்டில எவ்வளவுதான் வீராப்பாய் இருந்தாலும் கட்டியவளுக்கு இயலாதென்றவுடன் குழந்தையாய் மாறி அந்தரித்துப்போய் அவளுடன் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளும் கணவன்.இன்பத்தில மட்டுமில்ல துன்பத்திலயும் கூடவே இருப்பம் என்டு உயிருக்கு போராடுற சக நண்பனோட கூடவே வந்து காத்திருக்கிற நண்பர்கள்.
அம்மா அப்பாட கடமைய தாங்களே ஏற்று அப்பப்பா, அப்பம்மா,தாத்தா,பாட்டியோட இரவு பகலா கட்டிலுக்கு பக்கத்திலயே காத்திருந்து அவங்கள உயிர்ப்பிச்சிடுவன் என்டு நம்பிக்கைய குடுத்துக் கொண்டிருக்கிற பேரன்/பேத்திகள்.
Ward ல கட்டில் கிடைக்காம வெளியில பாயில படுத்திருக்கிற அவனுக்காக வெளியில அவனது தலையை தன் மடியில் வைத்து தலை கோதிக் கொண்டு கூடவே இருக்கும் அவள்.கூட நிக்க யாருமே இல்ல என்டதும் அநாதையாகி விட்ட உறவுகளோட தங்கட குடும்பத்தின்ர பசியப் போக்க சின்ன ஒரு தொகைய வாங்கிட்டு கூடவே இருந்து பாத்துக் கொள்ளுற பெறாமகன்கள் / பெறா மகள்கள்.(உதவியாளர்கள்)

இது எல்லாத்துக்கும் மேல எவ்வளவு வயசாகினாலும் இயலாத கட்டத்திலயும் , எவ்வளவு கடினத் தன்மையில அனுமதிக்கப்பட்டாலும் அந்த உயிரக் காப்பாத்துறதுக்காக கடைசி வரைக்கும் போராடுவம் என்டுற மன உறுதியோட போராடிக் கொண்டிருக்கிற வைத்தியர்கள் , தாதியர்கள், சக ஊழியர்கள்.ஆம். இப்பொழுதெல்லாம் நிஜ தேவதைகளையும் நிஜ ஆண் அழகர்களையும் அடிக்கடி நேரில் சந்திக்கிறேன்.Source: KS Jeyakirushna