மகனின் பிறந்த நாளை முன்னிட்டு $1000 டொலர்களை எங்கள் இதய சத்திர சிகிச்சை திட்டத்திற்கு வழங்கிய நல்லுள்ளம்!நேற்று நான் கனடா கந்தசாமி கோவிலில் நின்று நிதி சேர்த்து கொண்டிருந்த வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் தன்னை விஜய் என்று அறிமுகம் செய்து கொண்டு சென்ற இரு கிழமைகளுக்கு முன் தான் என் நேர்காணலை வானொலியில் கேட்டதாக கூறி, என்னை உடன் சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் கந்தசாமி ஆலயத்தில் இப்போது நிதி சேகரித்து கொண்டு நிற்கிறேன், இன்னொரு நாள் சந்திக்கலாமா என்று கேட்க; அவர் இன்று தனது மகனின் பிறந்த நாள் என்றும், இதய சத்திர சிகிச்சை நிதிக்கு அவரின் கைகளால்
நிதியளிக்க விரும்புவதாக கூறினார். அகம்மகிழ அவரின் விருப்பத்தினை ஏற்று நானும் எனது துணைவியாரும் கோவில் நிதி திரட்டல் முடிந்த பின் நேராக Etobicoke என்னும் இடத்தில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்றோம். எங்களை அந்த குடும்பமும், அவரின் நண்பர்களும் வரவேற்று நன்கு உபசரித்து நல்ல அறுசுவையான உணவினையும் வழங்கினார்கள்.
அப்போது தான் தெரிந்தது விஜய் திறமையான சமையல் வல்லுநர் என்று, அது அவர் தொழிலும் கூட. தாயகத்தில் விசுவமடுவை சேர்ந்த இவர், இங்கு டொரோண்டோவில் நடக்கும் வீட்டு வைபவங்களில் தனது ஊழியர்களோடு சென்று கொத்து ரொட்டி, அப்பம், பாஸ்டா, பிரியாணி என்று சமைத்து கொடுத்து விருந்தினர்களின் பசியாற்றி மகிழ்விப்பவர்கள் என்று.

பெற்றோர் தங்கள் பிள்ளை கவினின் கைகளினால் $1000 வழங்கி வைத்தனர். இந்த சிறு வயதினிலேயே தானம் வழங்குதல் நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருத்தல் வேண்டும் என்று பிள்ளைகளை பழக்கி வளர்ப்பது சிறப்பு. நன்கொடையினை பெற்று கொண்டு நானும் துணைவியாரும் இப்படியான நல்லுள்ளங்கள் எல்லாம்
இருக்கின்றனரே என்று கதைத்து கொண்டு எங்கள் வீடு போய் சேர்த்தோம். கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். அந்த கொடுப்பணை எல்லோருக்கும் அமைவதில்லை. இவர்களை போல பல நல்ல உள்ளங்களின் தொடர்பு கிடைக்க காரணமான CMR வானொலிக்கு நன்றி.

தாயகத்தில் ஒரு இதயத்துடிப்பு நின்று விடக்கூடாது என்று எண்ணி, செல்வன் கவினின் பிறந்த நாளில் $1000 நிதி வழங்கிய பெற்றோர் திரு திருமதி விஜய் தம்பதியினருக்கு எல்லாம் வல்ல இறைவன் சகல செல்வத்தினையும் தர வேண்டுகிறேன். இக்குடும்பம் நலமே நீடுழி வாழ்க. பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வன் கவினுக்கு!